மட்டக்களப்பின் பூர்வீக வழிபாட்டு தெய்வங்கள் பற்றிய ஆய்வுச்சுருக்கம் - பகுதி 5 (25.11.2019)
விவசாய பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்குடனும் விலங்குகளை காவல் காக்கவும் தமக்கு நோய் நொடிகள் வராமல் பாதுகாக்கவும் சிறு தெய்வங்களை வழிபட்ட மக்கள் காலப் போக்கில் ஆரிய மயமாக்கம் மட்டக்களப்பில் ஆக்கிரமித்ததும் பெருந்தெய்வ வணக்க முறைகளுள் திணிக்கப்படுகிறான். இது 13ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகும் கலிங்க மாகோன் பொலநறுவையை கைப்பற்றி ஆட்சி செய்கிறான். இவனே மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு நிலைபெறுவதற்கு காரணமாக இருக்கிறான். சாதிக்கொரு தெய்வம் என்ற நிலையை மக்களிடையே அதிகாரத்தைப் பயன்படுத்தி உருவாக்குகிறான். தனது அரசை கட்டியெழுப்ப சமயத்தை முதல் துணையாகக் கொள்கிறான்.
அதற்கமைய முக்குவர், வேளாளர், தனக்காரர் ஆகியோர் தமது பிரதான முக்கிய தெய்வங்களாக முருகன், கண்ணகி, சிவன், மாரியம்மன் ஆகியோரை வணங்குகின்றனர். சீர்பாத காரர் முருகனையும், கரையார் கடல்நாச்சி அம்மனையும், வண்ணார் பெரியதம்பிரானையும், தட்டார் காளியையும், நளவர் நரசிங்க வைரவரையும், வேடர் குமாரரையும் பெரும்பாலும் இன்றுவரை ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு தெய்வம் என்ற வகையில் வணங்கி வருகின்றனர்.
மகனின் ஆட்சி பௌத்த மதத்துக்கு எதிராக இருந்தது. யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியதும் மகோன்தான் என்ற கதையும் உலாவுகிறது. சாதி அமைப்பு மட்டக்களப்பில் தளர்வான நிலையில் இருந்தாலும் சமயத்தை கொண்டு கட்டாயமான சட்டமாக்கினான். இதனை சாதிக் கல்வெட்டு பின்வருமாறு கூறுகிறது.
உழவருக்குச் சிவனாம்
உடுக்கு மாரி அம்மன்
நழவருக்கு வைரவராம்
நாடார்க்குக் கண்ணகையாம்
தொழுவருக்குப் பிதிராம்
தொண்டர்க்கு வேலவனாம்
மழவருக்கு வீரபத்திரன்
மறையோர்க்கு நான்முகனே
வேந்தருக்கு மாலாம்
வேடருக்குக் கன்னிகளாம்
ஏந்துபணி செய்வோர்க்கு
காளியாம்- நேந்து வைக்கின்
முட்டன் முடுவன்
முனிவரெவர் ஆர் வரினும்
பட்டமது கட்டி வைத்தான்
பாண்டி மன்னன்.
இக் கல்வெட்டில் உள்ள தெய்வங்களை நோக்கும் போது ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்த தெய்வங்களை மறுக்கவில்லை அப்படி இருந்த போதிலும் புதிய தெய்வங்களை திணிக்கவும் மறக்கவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது.
இங்கே "வேடருக்கு கன்னிகளாம்" என்ற வரி சிலவேளை குழப்பத்தை உண்டு பண்ணலாம். இங்கு கன்னிகள் என்று குறிப்பிடப்படுவது நாம் முன்னரே பார்த்த மாநீலியா, மறமுந்த, குருவிலிமுந்த, எரிகணுமுந்த, முக்காட்டுத்தெய்வம், ஆலாத்தித்தெய்வம் போன்றன அவர்களிடமே விடப்பட்டது.
முற்காலத்தில் சாதித்தெய்வ அமைப்பு முறை இருப்பினும் பிற்காலத்தில் காலமாற்த்துடன் சேர்ந்து வணக்கம் முறையும் மாறியிருப்பதை இன்று எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது. நாடார்க்குரியதாகக் கூறப்பட்ட கண்ணகி வணக்க முறை பின்னர் முக்குவர்க்கும் வேளாளருக்கும் கரையாருக்கும் ஏனையோருக்குமானது.
ஏந்து பணி செய்பவர்களுக்கான காளி வணக்கம் எல்லோரிடமும் சென்றது முக்கியமாக பொற்கொல்லரிடமும் வண்ணாரிடமும் சென்றது.
எல்லாச் சாதியினரிடமும் பரவிய வணக்கமுறை
சாதிக்கு ஒரு தெய்வம் என்று முன்னர் விதிக்கப்பட்டிருப்பினும், பிரதானமான தெய்வத்திற்குரிய கோயிலிலேயே ஏனைய சிறு தெய்வங் களுக்கும் பந்தலிட்டு எல்லாத் தெய்வங்கனையும் வணங்கும் வணக்க முறையை மட்டக்களப்பில் பெரும்பாலான சாதியாரிடம் காண முடிகிறது.
உதாரணமாக வேடரிடம் காணப்பட்ட வதனமார் வணக்கமுறை நளவரிடமும், முக்குவரிடமும், கரையாரிடமும் காணப்படுகிறது.
முக்குவருக்குரியதான மாரியம்மன் வணக்கமுறை சகல சாதியினரிடத்தும் காணப்படுகிறது. எனினும் சில வணக்கமுறைகள் சிலரிடம் இல்லை.
உதாரணமாக முக்குவர், வேளாளர் இன்று வணங்கும் கண்ணகி அம்மன் வணக்கமுறை, அதிகார அடைவிற் குறைந்த வகுப்பினரிடையேயும் பொற்கொல்லரிடையேயும் இல்லை.
அதே போல் வண்ணாரிடம் உள்ள பெரிய தம்பிரான் வணக்கம் உயர் சாதியினரென அழைக்கப்படுவோரிடம் இல்லை.
இன்றைய இந்நடைமுறை ஒரு காலத்தில் ஒவ்வொரு சாதிக்கும் குறிப்பிட்ட தெய்வமும், வணக்கமுறையும் இருந்தது என்பதையும் பின்னாளில் சகல வணக்க முறைகளும் ஒரு குறிப்பிட்ட அளவு கலந்தன என்பதையும் காட்டுகின்றது.
இன்று இங்கு சாதி அமைப்பில் மிகத் தாழ்நிலையிலுள்ள சாதியினர் என கருதப்படும் சாதியினர் தொடக்கம் உயர்நிலையிலுள்ள சாதியினர் என கருதப்படும் சகல சாதியினரும் வணங்கும் பொதுத் தெய்வம் மாரி அம்மனாகும்.
சிறு தெய்வங்களுள் வளர்ச்சி பெற்ற பெரும் தெய்வமாக மாரி அம்மன் காட்சி தருகிறது.
மட்ட்க்களப்பின் பொதுத் தெய்வமாக மாரி அம்மன் திகழ்வது கவனிப்பிற்குரியது பின்னால் வந்து சேர்ந்த சிவன், பிள்ளையார், முருகன் வணக்கங்களும் மாரிஅம்மன் போல பின்னாளில் பொதுத் தெய்வங்களாயின.
புராதனத் தெய்வங்களும் வழிபாடுகளும் வளர்ச்சி பெற்ற தெய்வங்களின் வருகையினாலும், வழிபாடுகளினாலும் மாறுதல் பெறுதல் இயல்பு.
தமிழ்நாட்டின் பண்டைய குறிஞ்சி நில வேடர் வணங்கிய வேலன் பின்னர் கொற்றவை சிறுவனாகியதும், சிவனுக்கு மனைவியாகத் தமிழ் நாட்டுக் கொற்றவை ஆக்கப்பட்டதும் இந்துமத வரலாறு தரும் செய்திகளாகும்.
https://i4batti.blogspot.com/2019/11/19112019.html
மட்டக்களப்பு வழிபாட்டிலும் இந்நிலை நடந்தேறியது.
(தொடரும்..)
-மட்டுநகர் திவா
view in blog: bit.ly/porvikam_5B
view in FB: bit.ly/porvikam_5F
Comments
Post a Comment