காலத்தால் மறைக்கப்பட்ட கொற்றவை (19/11/2019)

‘கொற்றவை’ என்பது ஒரு பழமையான பெண் தெய்வமாகும். தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் பழையோள் எனக் கொற்றவை குறிப்பிடப்படுகிறது. மறவர் மற்றும் எயினர் (தற்போது எயினர் என அறியப்படும் சாதி இல்லை. ஆயினும் மறவர்கள் உள்ளனர்) கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. மறவர் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும், அவர்கள் ஐவகை நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர்.
கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. இந்தப் பாட்டுக் கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளுடன் வேடர்கோயிலில் தங்கும்பொழுது வேடர்கள் பாடுவது:"ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்" என இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது கதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
கொற்றவை பாலை நிலக்கடவுளாக விளங்குகிறாள். பாலை என்பதை நாம் மணல்வெளியாக நினைக்கக்கூடாது. சங்க இலக்கியத்தில் பாலை என்பது முல்லைக்காடும் குறிஞ்சிமலையும் வெயில்காலத்தில் திரிந்து வாடியிருப்பதே ஆகும். "முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்று சிலப்பதிகாரம் சொல்லும். எனவே அடிப்படையில் காடும் கரடும் பாலை ஆகும். எனவே கொற்றவையைக் கானமர்செல்வி என்று சங்கக்கவிதைகள் கூறும். அங்காயி அல்லது மாரியாயி இவைகள் பழைய கொற்றவையின் பெயர்களாக இருக்கவேண்டும்.

கானகத்தில் வசிக்கும் வேட்டுவர் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொற்றவையை வழிபட்டுள்ளனர். ‘பாய்கலைப்பாவை’ என்றும் கொற்றவை அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது.
மழை வளம் இல்லாத பகுதியில் வாழும் மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும்,அதற்குக் கைமாறாக வீரத்தன்மைக்கு அடையாளமான அவிப்பலியை எதிர்பார்ப்பவள் என்றும், அவள் நெற்றிக்கண்னை உடையவள், விண்ணோரால் போற்றப்படுபவள், குற்றம் இல்லாத சிறப்புக் கொண்ட வான நாட்டினை உடையவள் என்றும் கொற்றவையின் இயல்பும் சிறப்பும் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன.
மன்னர்கள் போருக்கு செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்து சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன. சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பழந்தமிழ்க் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டாள்.
சிலப்பதிகாரமும் உமை, கொற்றவை இரண்டு பெண்தெய்வ வடிவங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது.
இதில் கொற்றவையே முதன்மை பெறுகின்றது எனினும், கொற்றவையில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தாக்கம் புலப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கொற்றவை திருமாலின் தங்கையாகக் காட்டப்பட்டதுடன் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றையும் கொற்றவை தாங்கியிருப்பதாகக் காட்டப்பட்டது.
காலப்போக்கில், உமையின் முக்கியத்துவம் அதிகரித்ததுடன், கொற்றவை உமையின் இன்னொரு அம்சம் எனப்பட்ட துர்க்கையுடன் ஒன்றிணைக்கப்பட்ட நிலை காணப்படுகிறது.
பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.
கொற்றவை தொடர்பான பாடல் ஒன்றுகீழுள்ள இணைப்பில் உள்ளது.
https://www.facebook.com/poovanmedia/videos/325972368057736/
இப்பதிவில் ஏதும் பிழை இருந்தால் மன்னிக்கவும்🙏, உங்களுக்கு தெரிந்ததை கீழே பதிவு செய்யுங்கள்.


- மட்டுநகர் திவா

Comments

Popular Posts