மட்டக்களப்பின் பாடும் மீன் உண்மை தானா ??

மீன் பாடுவதாக ஒரு நம்பிக்கை எம் சமூகத்தில் இருந்து வருகின்றது. பாடும் மீனையே
“பாடுமீன்” என வழங்குவதாக அறிய முடிகிறது. இத்தகு பாடுமீன் இனம்
இலங்கையில் கல்லடியிலும் கலிபோர்னியாவிலுமே உள்ளதாகக் கருதப்படுகின்றது.
ஆனாலும், இத்தகு பாடுமீன்கள் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் இன்னும் நம்பகமற்ற அல்லது நம்பலாமா? நம்பக்கூடாதா? என்ற நிலையிலையே உள்ளன. எவ்வாறாயினும், நாம் இன்று பாடுமீன் பற்றிய சில சுவாரசியத் தகவல்களைக் காண்போம்.
இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள மட்டக்களப்பில் கல்லடி வாவிப்
பகுதியில் பாடும் மீன் இனங்கள் வாழ்வதாகக் கருதப்படுகிறது. 18 ஆம்
நூற்றண்டுக்ளில் இருந்து மட்டக்களப்பு மீன்பாடு வாவியில் ஒருவகை மீன் பாடுவதை
மீனவர்கள் கேட்டுள்ளார்கள். ஆனாலும், அநேக மக்கள் இதை நம்பவில்லை. பாடும்
மீன்கள் இருப்பதை அதற்கு முன்பு உலகத்தில் எந்த நீர்நிலைகளிலும் இப்படி மீன்
பாடிய தகவல் அறியப்பட்டதாக செய்திகள் பதிவு செய்யப்படவில்லை என்பதே
உண்மை. ஆனாலும், அநேகமாக இந்த வகை மீன்கள் கல்லடிப் பாலத்தின் அடியிலும்
அதனை அண்டிய பகுதிகளிலும் இவ்வாறு மீன் பாடுவதை நடு இரவுகளில்
அவதானித்தனர். பாடும் மீன்களை ஆய்வுகள் செய்யும் அளவிற்கு அக்காலம்
அறிவியல் ரீதியில் முன்னேறியிருக்கவில்லை. ஆனால், மக்கள் மத்தியில் மிகப்
பிரபல்யமாகப் பேசப்பட்ட ஒன்றாக இப் பாடு மீன்கள் காணப்பட்டன. இப்பாடு
மீன்களை கலைஞர்கள் வர்ணித்தார்கள் (விபுலாநந்தர் – நீரரமகளிர்), சில இடங்களில் இம் மீன்கள் கடற்கன்னிகளாகவும் சித்தரிக்கும் அளவிற்கு உலகப் பிரபல்யம் அடைந்தது.
இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது.
இதனை இலக்கியங்களில்n “நீரரமகளீர்” இசைக்கும் இசை என வர்ணிக்கப்படுகிறது.
ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம்
காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு மீன் பாடும் தேன் நாடு எனப்
பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றமையும் குறிப்பிடற்குரியது.
பொதுவாக இவ்வகை மீன்கள் பாடுவதை முழுப் பூரணை நாட்களில் அமைதியான
இரவில் கல்லடிப் பாலத்தின் அடியிலுள்ள ஆழமான பகுதியிலும் பாலத்திலிருந்து
தென் மேற்குப் பகுதியில் நீர் மேல் தென்படும் ஒரு மலைக் குன்றுகளுக்கும் அதைச்
சுற்றியுள்ள பகுதியிலும் இவ்வகை மீன்கள் பாடுவது ஒரு சாதரண நிகழ்வாக 1960
ஆண்டு காலப் பகுதியில் காணப்பட்டுள்ளது.
மீன்கள் பாடுவதை உறுதி செய்யக் கத்தோலிக்க குருவான அருட்தந்தை லாங் (Fr.
Lang) என்பவர் முயற்சித்தார் எனவும் mic ஒன்றினை மீன் பாடும் பகுதிகளில்
மீனவர்களின் துணையோடு பொருத்தி மீன்கள் பாடுவதை மட்டக்களப்பு நகர் மக்கள்
அனைவரும் கேட்கும் படி ஒரு ஒலிபெருக்கி ஒன்றையும் பாலத்தின் மேலே இணைத்து
மீன்கள் பாடியதை 8 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்து மட்டக்களப்பு மண்ணின்
மகிமையை உலகிற்கு பறை சாற்றினார் எனவும் இவ் மீனிசையை ஒலிப்பதிவு செய்து
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக 1960களில் ஒலிபரப்பினார் என்றும்
சொல்லப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட மீன் பாடும் இசையை B B C வானொலியில்
மீண்டும் ஒளிபரப்பப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பிற்பாடு மீன்கள் பாடுவதை கேட்க முடியவில்லை என  அப்பிரதேச மீனவர்கள் மிக்க கவலையோடு குறிப்பிட்டிருந்தனர். மட்டக்களப்ப மண்ணிற்கு பெருமை ஈட்டித் தந்த அழகிய மீன் இனம் அழிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

Comments

Popular Posts